search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிடம் விசாரணை"

    ஓசூரில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நவதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவர் பெங்களூருவில் தங்கி கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். இதில் பூவரசன் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். பூஜா பிளஸ்-2 படித்து வருகிறார். ராஜாவின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பூசாரிப்பட்டி ஆகும்.

    இதனிடையே ராணி ஓசூர் நவதி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மகள் பூஜாவுடன் தங்கி வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு பூஜா வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் அவரது ராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசிய ராணி, வீட்டில் இருந்து ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவி பூஜா தூங்கி விட்டார்.

    இந்த நிலையில் தூக்கம் கலைந்து எழுந்து பூஜா பார்த்த போதும் தாய் ராணி வரவில்லை. இதுகுறித்து அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் ராணியை தேடினார்கள். அப்போது நவதி அருகில் ராணி வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராணியின் முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை யாராவது முன்விரோதம்காரணமாக வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று சாரணை நடத்தினர்.

    இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் ராஜாவின் சொந்த ஊரான பாலக்கோட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராணியின் கணவர் மற்றும் மகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் ராணியின் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×